ஆனி அமாவாசையை ஒட்டி தடையை மீறி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!: அக்னி தீர்த்த கடலில் அலைமோதும் கூட்டம்..!!

ராமநாதபுரம்: ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தடையை மீறி கோயில் மற்றும் நீர் நிலைகளில் மறைந்த முன்னோர்களுக்கு பொதுமக்கள் இன்று தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். புனித மையமாக கருதப்படும் ராமேஸ்வரத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். தர்ப்பணம் கொடுப்பதற்கு கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் நீராட வேண்டாம் என அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். இதேபோல் திருவள்ளூரில் உள்ள வீரராகவ சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை தினத்தின் முதல் நாள் இரவு கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சியை கோயில் நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. இருப்பினும் கோயில் முன்பு ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்டனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

Related Stories: