தேனியில் ஓ.பி.எஸ்.க்கு தெரியாமலா தண்ணீர் திருட்டு நடந்தது? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

தேனி: முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் 10 ஆண்டுகளாக நடந்த தண்ணீர் திருட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிந்து நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தண்ணீர் திருட்டு குறித்து புகார் அளித்து அதனை தாம் தடுத்து நிறுத்தியதாக கூறினார். ஆனால் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அது தொடர்ந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் கொண்டு தண்ணீர் திருடப்படுவதால் மின்துறைக்கு ஒருநாளைக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறிய அவர் 5 மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் தண்ணீர் திருட்டில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Related Stories: