தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய  தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம். இந்த கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப்பாட நூல்கள், சிறுபான்மை மொழிப் பாட நூல்கள், மேனிலைப் பள்ளிக்கான தொழில் கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிக்கான பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை இக்கழகம் செய்து வருகிறது. இது தவிர பழைய பாடநூல்களை மீட்டுருவம் செய்து இணைய தளத்தில் கொண்டு வரும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் மொழி பெயர்ப்பு பணிகளையும் செய்து வருகிறது.

இந்த கழகத்தின் பணிகள் செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்த நிறுவனத்துக்கு புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, அரசு நியமித்துள்ளது. இதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, மேடைப்பேச்சாளர்,  இலயக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவராக இருப்பவர். இவருக்கு 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

Related Stories: