முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை மாலை திமுக-வில் இணைகிறார் மநீம முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன்..!!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகி சென்றனர். மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட அவர் அக்கட்சியின் துணை தலைவராகவும் இருந்தார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு கமல்ஹாசன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். கட்சியில் எங்கள் குரலுக்கு மதிப்பு இல்லாததால் கட்சியில் இருந்து வெளியேறினேன் குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார். மேலும் கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அவரை துரோகி என விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது. இந்நிலையில் மகேந்திரன் நாளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவதற்கான பட்டியலையும் மு.க.ஸ்டாலினிடம் அவர் வழங்கவுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: