மானாமதுரை நெடுஞ்சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்-வாய்க்கால்கள் அடைப்பு, கால்நடைகள் பாதிப்பு

மானாமதுரை : மானாமதுரையில் நெடுஞ்சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள் இரைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் இருந்து சிவகங்கை, திருப்புத்தூர், புதுக்கோட்டை வழியாக பெரம்பலூர் செல்லும் மாநில சாலை கடந்த 2014ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டில் பணிகள் துவங்கியது.

வளைந்து நெளிந்து மிக குறுகலாக இருந்த இந்த சாலை விரிவாக்கப்பட்டு நேராக்கப்பட்டது. இதனால் தற்போது பணிகள் முடிந்த இந்த சாலையில் வாகனங்கள் எந்த வித தடங்கலும் இன்றி விரைவாக செல்கின்றன. குறிப்பாக சிவகங்கையில் இருந்து மானாமதுரை வரை உள்ள பல்வேறு கிராமங்களுக்கு இந்த சாலை மிகவும் உபயோகமாக உள்ளது.மானாமதுரை முதல் சிவகங்கை வரை இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் விலக்குரோடுகள் இந்த சாலையில் குறுக்கிடுகின்றன.

பகல் நேரங்களில் தேசியநெடுஞ்சாலையில் வாகனங்களில் மருத்துவமனை கழிவுகள், ஓட்டல், திருமணமண்டபங்களில் சேகரமாகும் உணவுகளுடன் கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த பகுதியில் வளர்க்கப்படும் யூக்கலிப்டஸ் மரங்களுக்கு இடையே வளரும் புற்கள், செடிகளை உண்ண வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இந்த உணவுக்கழிவுகளுடன் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்டு இரைப்பை கோளாறுகள் ஏற்பட்டு பலியாகின்றன.

இது குறித்து விவசாய சங்க மாநில நிர்வாகி ராமமுருகன் கூறுகையில், மானாமதுரை சிவகங்கை இடையே போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் மாடக்கோட்டை விலக்கு பகுதியில இருந்து உருளி விலக்கு வரையிலும் கண்டனி முதல் சாமியார்பட்டி வரை சாலைகளின் இருபுறங்களிலும் திருமணமண்டபங்கள், ஓட்டல்கள், பேக்கரி, தனியார் மருத்துவமனைகளில் இருந்து உணவுக்கழிவுகளுடன் கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் இவற்றை உண்டு செரிமானக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீர் கால்வாய்களிலும் அடைப்பு ஏற்படும். எனவே நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: