பழநி அருகே வட்டமலையில் ஒற்றை யானை வலம்

பழநி : பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள வட்டமலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். பழநி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதி எல்லைகளில் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், உரிய பலனில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உணவு தேடி ஒற்றை யானை ஒன்று பழநி-கொடைக்கானல் சாலையில் உலா வருவது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியின் வழியாக ஒற்றை யானை உலாவும் வீடியோ வெளியானது. இந்நிலையில் பழநி-கொடைக்கானல் சாலையில் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகில் உள்ள வட்டமலைப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிந்து வந்தது.

 இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளது.  

இதனால் சுற்றுலா பயணிகள் வருகை துவங்கி உள்ளது. இந்நிலையில் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் உலா வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: