பேட்மேனுடன் பிராவோ

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரர் டுவெய்ன் பிராவோ சமீபத்தில் கோவை வந்து ‘பேட்மேன்’ அருணாச்சல  முருகானந்தத்தை சந்தித்துஇருக்கிறார்.

பெண்கள் தங்களின் மாதவிடாய் குறித்து பொது வெளியில் பேசத் தயங்கும் சூழலில்தான், நாம் நமது பெண் குழந்தைகளை வளர்த்து வைத்திருக்கிறோம். அப்படியிருக்க, அமெரிக்க கண்டத்தின் கரீபியன் நாட்டில் உள்ள தீவுகளில் இருக்கும் பெண்களின் நிலை? தனது சொந்த நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பெண்கள் அதை எதிர்கொள்ள வசதியற்று, பருவம் அடைந்ததுமே படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.

இதனால் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது பிராவோவுக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது நாட்டு பெண் குழந்தைகளின் மாதவிடாய் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இருந்திருக்கிறார் பிராவோ. குறைந்த விலையில், பாதுகாப்பான நாப்கின்களைத் தயாரிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சல முருகானந்தம் குறித்து பிராவோவுக்குத் தெரிய வருகிறது. முருகானந்தம் குறித்த ஆவணப்படம் அவருக்குள் நம்பிக்கையை விதைக்க, தமிழகம் வந்த பிராவோ, நேராக கோவையில் வசிக்கும் முருகானந்தத்தை அவரின் கிராமத்திற்கே சென்று சந்தித்திருக்கிறார்.

மாதவிடாய் நேரத்தில் தங்கள் நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து அவரிடத்தில் விரிவாக விவாதித்திருக்கிறார்.

தனது  நாட்டுப் பெண்கள் நாப்கின் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் உதவ வேண்டும். உங்களின் இந்த எந்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இதைப்போல எனக்கு ஒரு எந்திரம் செய்து கொடுக்க முடியுமா என பிராவோ கேட்க, மகிழ்ச்சி அடைந்த அருணாச்சலம் இயந்திரத்தை உடனடியாக தயாரித்து அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.

அருணாச்சலம் அனுப்பும் இயந்திரத்தை தனது நாட்டில் நிறுவி, நாப்கின்களைத் தயாரிப்பது குறித்து ஆலோசனைகளைப் பெற்றவர், எந்திரத்தை தனது செலவிலேயே மேற்கு இந்தியத்தீவு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்திய கிராமங்களில் இருப்பதைப் போன்றே, அங்கிருக்கும் தனது நாட்டு கிராமப்புறப் பெண்களை வைத்து நாப்கின்களைத் தயாரிக்க, மேலும் சில எந்திரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார் பிராவோ.

அதுவரை பிராவோ என்றால் யாரென்றே தெரியாத முருகானந்தம், இவரின் நல்லெண்ண முயற்சிக்காக, நாப்கின் தயாரிக்க கற்றுக்கொடுத்ததோடு, பிராவோவை உடனடியாக நாப்கின் ஒன்றை  உருவாக்கவும் வைத்திருக்கிறார். நாப்கின் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், இயந்திரம் குறித்த தகவல்களையும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை விலை மலிவாய் உருவாக்க, அருணாச்சலம் சந்தித்த இன்னல்கள், அவமானங்களைக் கடந்து, நாப்கின்களை அவர் எப்படி உருவாக்கினார் எனும் உண்மைச் சம்பவங்களுடன் நடிகர் அக் ஷய்குமார் நடித்து,  ஹிந்தியில் உருவான ‘பேட்மேன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பல ஆயிரம் பெண்களைச் சந்தித்து, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு உருவானதே குறைந்த விலை நாப்கின் தயாரிப்பு எந்திரம். தற்போது இந்தியாவில் 25 மாநிலங்களில் இந்த எந்திரம் பயன்பாட்டில் இருக்கிறது. இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மா விருதை வழங்கி கவுரவித்தது. கடந்த ஆண்டு 2018ல் வெளியாகி பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை பேசிய ‘‘பீரியட் எண்ட் ஆப் தி செண்டன்ஸ்

ஆவணப்படமும் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இதில் அருணாச்சல முருகானந்தமும் இடம்பெற்றிருப்பார்.

 

பிராவோ கடந்த ஐ.பி.எல். போட்டியிலேயே அருணாச்சல முருகானந்தம் குறித்து விவரங்களை அறிந்து சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மேற்கு

இந்தியத் தீவில் இருந்து நேரடியாக கோவை கேஎன்ஜி புதூருக்கு வந்தவர், ஒரு நாள் முழுவதும் அருணாச்சலத்தோடு உரையாடி இருக்கிறார். எந்திரத்தின் செயல்பாடு மட்டுமல்லாது, அருணாச்சலம் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும் பிராவோ கேட்டறிந்துள்ளார். தன் நாட்டு பெண்களின் பிரச்சனையை தீர்க்க பிராவோ செய்து வரும் பெரும் முயற்சிக்கு சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாகப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: