எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தின் குறைபாடு கண்டு பிடித்தது எப்படி?.. கொள்ளையன் நஜிம் உசேனிடம் 3வது நாளாக போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

சென்னை: எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் உள்ள குறைபாட்டை கண்டு பிடித்தது எப்படி என்று கைது செய்யப்பட்ட கொள்ளையன் நஜிம் உசேனிடம் போலீசார் 3வது நாளாக கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் அளித்த தகவலின் படி 9 பேர் கொண்ட குழுவிற்கு தலைவனாக செயல்பட்ட தொழில் நுட்பம் தெரிந்த கொள்ளையனை தனிப்படையினர் அரியானாவில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னையில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ராமாபுரம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வடபழனி, வேப்பேரி, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள கிளையில் அமைக்கப்பட்டுள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.45 லட்சத்துக்கும் ேமல் பணம் மாயமானது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர வேட்டையில் அரியானா மாநிலம் சென்று, பலதரப்பினரின் உதவியுடன் ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட அமீர் அர்ஷ்(27), வீரேந்திர ராவத்(23), நஜிம் உசேன்(25), சவுகத் அலி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.4.50 லட்சம் பணம், கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்களும் அரியானா பல்லப்கர்க் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர் என தமிழகம் முழுவதும் 21 இடங்களில் 9 குழுக்களாக பிரிந்து நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.  மேலும், தற்போது கைது  செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகள் மீதும் ராமாபுரம், பெரியமேடு, தரமணி, பீர்க்கங்கரணை காவல் நிலையங்களில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4வது நபராக கைது செய்யப்பட்ட சவுகத் அலியை பெரியமேடு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று நீதிமன்றத்தில் பெரியமேடு போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதற்கிடையே 4 நாள் காவலில் பீர்க்கங்கரணை போலீசார் நஜிம் உசேனை விசாரணை நடத்தி வருகின்றனர். இவன் 4வது நபராக கைது செய்யப்பட்ட சவுகத் அலியின் குழுவில் முக்கிய நபராக இருந்துள்ளான். இவர்கள் அரியானாவில் இருந்து கார் மூலம் தமிழகம் வந்து பணத்தை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம், எஸ்பிஐ வங்கியில் உள்ள டெபாசிட் இயந்திரம் அதுவும் ஜப்பான் தயாரித்து கொடுத்த இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை எப்படி தெரிந்து கொண்டனர். நூதன திருட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 9 கொள்ளையர்களையும் இயக்கியது யார்? இவர்களுக்கு ஜப்பான் நிறுவனம் தயாரித்த டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் திருட தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்தது யார்?

உள்ளிட்ட கேள்விகளை கேட்டு போலீசார் கொள்ளையன் நஜிம் உசேனிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் படி 9 பேர் கொண்ட 3 குழுக்களின் தலைவன் குறித்து தனிப்படை போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதை வைத்து  அரியானாவில் தனிப்படை போலீசார் தொடர்ந்து முகாமிட்டு கொள்ளை கும்பலின் தலைவன் உட்பட 5 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: