நாகர்கோவிலில் லாரியில் கடத்திய 22 டன் ரேஷன் அரிசி சிக்கியது: தனிப்படை போலீசார் மடக்கினர்

நாகர்கோவில்: நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு கடத்திய 22 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் மடக்கினர். குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் நாகர்கோவில் வெட்டூணிமடம் அருகே, வாகன சோதனையின் போது லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 30 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இந்த நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு லாரியில் அரிசி கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி மற்றும் ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் தனிப்படை போலீசார் வந்த போது அந்த வழியாக லாரி சென்றதை பார்த்தனர். உடனடியாக அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ய முடிவு செய்தனர். போலீசார் நிறுத்தியதும், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்ப முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் லாரியை சோதனை செய்த போது அதில் 22 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை வடசேரி காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் பிடிபட்ட லாரி டிரைவர் மடிச்சல் பகுதியை சேர்ந்த ராஜன் (48) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.எஸ்.பி. நவீன்குமாரும் வடசேரி காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினார். வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. பல்வேறு சோதனை சாவடிகளை தாண்டி எளிதில், குமரி மாவட்டத்துக்குள் கடத்தல் லாரிகள் வந்து விடுகின்றன. இடைப்பட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் கடத்தல் லாரிகளை கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Related Stories: