மதுரை வீட்டிற்கு அழைத்து வந்து அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை: ஸ்மார்ட் போன், முக்கிய ஆவணங்கள் சிக்கின?

மதுரை: நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசியா குடியுரிமை பெற்றவர். மலேசியா சுற்றுலா வளர்ச்சிக் கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் நட்பு கிடைத்தது. நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் உறுதியளித்துள்ளார். இதையடுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கணவன், மனைவியாக வசித்து வந்துள்ளனர். இதில் சாந்தினி 3 முறை கருவுற்றுள்ளார். 3 முறையும் சாந்தினியை கட்டாயப்படுத்தி, அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

சாந்தினி தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், ‘ஒழுங்காக மலேசியாவிற்கே சென்று விடு.. இல்லையேல் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று சாந்தினிக்கு, மணிகண்டன் மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த நடிகை சாந்தினி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மே 28ம் தேதி இது குறித்து புகார் செய்தார். அடையார் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதை அறிந்த மணிகண்டன் தலைமறைவானார்.

சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. கடந்த ஜூன் 20ம் தேதி பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டியை அடுத்த கெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பதுங்கியிருந்த மணிகண்டனை தனிப்படை  போலீசார் கைது செய்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள 17வது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் 2 நாள் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதியளித்தது. நேற்று சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் ஒரு போலீஸ் டெம்போ வேனில், அடையாறு போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் மணிகண்டனை அழைத்துக் கொண்டு இன்று காலை மதுரை வந்தனர்.

காலை 8 மணியளவில் மதுரை அண்ணா நகரில் உள்ள மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டிற்கு அனைவரும் வந்தனர். வீட்டில் வைத்து ஒன்றரை மணி நேரம் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரது உறவினர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது. பின்னர் அவரது வீட்டில் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த மற்றொரு ஸ்மார்ட் போன் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை கொடுத்த புகாரில் தொடர்புடைய சில ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. விசாரணைக்கு பின்னர் 9.30 மணியளவில் போலீசார் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். செய்தியாளர்கள் யாரும் படம் எடுக்க முடியாதபடி சுற்றி வளைத்து அவரை கூட்டி வந்து, அதே வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த விசாரணை குறித்து  உதவி கமிஷனர் நெல்சன் கூறுகையில், ``மாலை 6 மணிக்குள் புழல் சிறையில் அடைக்க வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக சென்னை செல்கிறோம்’’ என்றார்.

Related Stories: