வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூர் பாலாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் நீர்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் ஊராட்சியில் புல்லூர் அருகே ஆந்திர அரசு சார்பில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பின்னர், 5 அடி உயரம் இருந்த தடுப்பணை 13 அடியாக உயர்த்தப்பட்டது. மேலும்,  ஆந்திர மாநில அரசு சார்பில் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழக-ஆந்திர வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி தமிழகத்திற்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

நேற்று முன்தினம் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புல்லூர் தடுப்பணை நேற்று முன்தினம் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. இதையறிந்த புல்லூர் மற்றும் திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலர் தூவியும், கற்பூரம் ஏற்றி வணங்கியும் பாலாற்றில் வரும் தண்ணீரை வரவேற்றனர். தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: