அம்பையில் பூட்டிய வீட்டிற்குள் மர்ம சாவு; மகிளா காங். தலைவி தற்கொலையா?.. போலீஸ் விசாரணை

அம்பை: அம்பையில் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த மகிளா காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பை, ஆசிரியர் காலனி, கம்பர் தெருவைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மனைவி சுதா (49). அம்பை வட்டார மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக பல வருடங்களாக கணவரை பிரிந்து, அம்பையில் தனியாக வசித்து வந்தார்.

சசி (32), வாசுகி (30) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து சுதாவின் உறவினர் நேற்று வீட்டுக்கு வந்த போது, உட்புறமாக பூட்டிக் கிடந்த கதவு நீண்ட நேரமாக திறக்காததால், ஜன்னலை தள்ளி விட்டு பார்த்துள்ளார். அப்போது சுதா வீட்டினுள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் துர்நாற்றமும் வீசியதால் அம்பை போலீசுக்கு  தகவல் தெரிவித்தார். அம்பை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராதா, அம்பை எஸ்ஐ சைமன் சாம்பாகூர், விஏஓ ஆகியோர் கதவை உடைத்து பார்த்த போது, சுதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டனர்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான

போலீசாரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சுதாவின் வீடு உட்புறமாக பூட்டியிருந்ததால், அவர் தனிமை துன்பத்தால் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என அம்பை போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவருக்கும், வேறு யாருக்கும் முன் விரோதம் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என அம்பை போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: