உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள்: உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !

ஜெனீவா: உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் போல உருமாற்றம் அடைந்து வரும் நோய்க்கிருமிகளால், உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்

Related Stories: