கைதான 7 பேர் சிறையில் அடைப்பு; குழந்தைகளை விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?.. அதிமுக ஆட்சியில் கொடி கட்டி பறந்த ‘சிவக்குமார்’: பரபரப்பு தகவல்கள்

மதுரை: மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் கைதான 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். காப்பக உரிமையாளர் சிவக்குமாருக்கும், அதிமுக முக்கிய நிர்வாகியுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் குறுகிய காலத்தில் சிவக்குமார் பிரபலமடைந்துள்ளாராம். எனவே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிபட்டியை சேர்ந்தவர் சோனைமுத்து மனைவி ஐஸ்வர்யா(23). கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் லேசான மனநல பாதிப்பில் இருந்த இவரை, அசாருதீன், மதுரை ரிசர்வ்லைனில் உள்ள ‘இதயம் டிரஸ்ட்’ காப்பகத்தில் கடந்த மார்ச் 20ல் சேர்த்தார்.

காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் காப்பக நிர்வாகிகள் சேர்ந்து, ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கத்திற்கு கொரோனா உறுதியானதாக கூறி, கடந்த 13ம் தேதி அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்த்திருப்பதாக அசாருதீனுக்கு தெரிவித்தனர். இது குறித்து கலெக்டர் அனீஸ்சேகர் உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.  இதில் காப்பக நிர்வாகிகளில் ஒருவரான கலைவாணி கொடுத்த வாக்குமூலத்தில் ஆண் குழந்தை மாணிக்கம், மற்றொரு 2 வயதான கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவியின் பெண் குழந்தை தீபா என்ற தனம்மாளும் மீட்கப்பட்டார்.

சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கிய கண்ணன் (50),  அவரது மனைவி பவானி (45) மற்றும் அனீஸ் ராணி (36), அவரது கணவர் சாதிக்  (38), காப்பக ஊழியர் கலைவாணி (36) மற்றும் குழந்தை விற்பனைக்கு புரோக்கராக  செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வி(45), ராஜா(38) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று  கைது செய்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிறையில் பெண்களையும், விருதுநகர் கிளை சிறையில் ஆண்களை நேற்று அடைத்தனர்.   போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘காப்பகத்தை சிவக்குமார் 12 வருடங்களாக பதிவு செய்யாமல் நடத்தி வந்துள்ளார். மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, காப்பகத்திற்கென பெரும் தொகையை மதுரை பிரபலங்கள் பலரிடமும் வசூல் செய்துள்ளார்.

முக்கியமாக, அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் சிவக்குமார் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் ஆய்வு செய்ததில் கணினியில் பல முக்கிய ஆவணங்களும், போலியான அரசு மருத்துவமனை ரசீதுகள் மற்றும் தத்தனேரி மயான ரசீதுகள், பூர்த்தி செய்யப்படாத இறப்பு சான்றுகள், அரசு முத்திரைகள் சிக்கியுள்ளது,’’என்றார். தலைமறைவாக உள்ள காப்பக உரிமையாளர் சிவக்குமார், நிர்வாகி மதார்ஷா ஆகியோரை தேடி 2 தனிப்படை சென்னை விரைந்துள்ளது. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சியில் குறுகிய காலத்தில் சிவக்குமார் பிரபலமடைந்துள்ளார். எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடல் உறுப்பு விற்பனை?

கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளை தத்தனேரி உள்ளிட்ட மாயனங்களில் அடக்கம் செய்துள்ளதாக போலி ஆவணங்கள் காப்பகத்தில் கிடைத்துள்ளது. இவர்கள் உண்மையில் இறந்தார்களா? அல்லது முதியோர்களை கொன்று உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பல குழந்தைகள் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கலைவாணிக்கு எடப்பாடி விருது  

காப்பக உரிமையாளர் சிவக்குமாருக்ரு மாவட்ட அளவில் சேவைக்காக பல விருதுகள் தரப்பட்டன. நிர்வாகி கலைவாணிக்கு மாநில அளவில் சிறந்த சேவைக்கான விருதினை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதற்கும் முன்னதாக இந்த காப்பகத்தில் பணிபுரிந்த அருண்குமார் என்பவரும் மாநில விருது பெற்றுள்ளார். இதுதவிர தலைமறைவான மேலும் ஒரு நிர்வாகி மதார்ஷாவிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்குவதற்காக சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கும் பரிந்துரை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அதற்கிடையில் குழந்தை விற்பனையில் இந்த காப்பகம் சீலிடும் நிலைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: