ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக ஊடகத்திலிருந்து விலக வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை

புதுடெல்லி: இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 72வது பிரிவை சோ்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காணொலி மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘போலீசார் மீதான நன்மதிப்பை மக்கள் மத்தியில் உயா்த்துவதற்கு ஏற்ப அவர்கள்தான் பணியாற்ற வேண்டும். பேசும்திறன் மற்றும் நிலைமையின் தன்மையை அறிந்து செயல்படுவதுதான் காவலா்களின் நன்மதிப்பை உயா்த்தும். பொது மக்களின் தகவல் ஒத்துழைப்பு இல்லாமல் குற்ற வழக்குகளைத் தீா்ப்பது கடினம். அறிவியல்பூா்வமான மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான விசாரணை நடைபெற்றால், அதிக மனித சக்திக்கான தேவை குறையும்.

சைபா் குற்றங்களோடு, பொருளாதார மற்றும் போதைப்பொருள் குற்றங்களை களையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களை  விளம்பரப்படுத்திக் கொள்வதில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது கடினம் என்றாலும், கடமைகள் மீது அவா்கள் கவனம் செலுத்த வேண்டும். நீதி நடவடிக்கை என்பது இயற்கையான நடவடிக்கை என்று பொருள்; காவல்துறையினர் சட்டத்தைப் புரிந்துகொண்டு சரியானதைச் செய்ய வேண்டும். காவல்துறையின் பிம்பத்தை மேம்படுத்த, பொதுமக்களுடன் தொடர்பு மற்றும் பொது உறவை அதிகரிக்க வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் ஒருநாள் இரவு தங்கி பணியாற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories: