500 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் துவங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக ‘தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019’ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.   இந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ”ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம்  நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  இந்த ஆலையில் இரு சக்கர வாகனத்துக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்கள் தயாரிக்கவும் திடமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக்மொபைலிட்டி நிறுவன அதிகாரிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்” என்று கூறினார்.

மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் அமைக்கும் தொழிற்சாலையில் 3,000 ரோபோக்கள் வாகனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது என்றார்.  தி.மலை, கடலூர், திண்டிவனத்தில் தொழிற்சாலை: தமிழகத்தில், திண்டிவனம், செய்யாறு  பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த பணிகளும் நடைபெற்று  வருகிறது. கடலூரில் எச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட  உள்ளது. இதுபோன்று பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில்  நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கிறது. வரும்  நாட்களில் பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Related Stories: