தவறி விழுந்ததை எடுத்து விழுங்கியது குழந்தையின் உணவுக்குழாயிலிருந்து மோதிரத்தை அகற்றிய மருத்துவர்கள்: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சாதனை

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 வயது குழந்தை விழுங்கிய மோதிரம் உணவுக்குழாயில் சிக்கிய நிலையில் நவீன சிகிச்சை முறையில் மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:சிவகங்கை, மதுரை முக்கு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ராம்பிரசாத், நிரஞ்சனா தம்பதியின் குழந்தை மதிமாலா(2). கடந்த ஜூன் 28ம் தேதி நிரஞ்சனா அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் தவறி வீட்டுக்குள் விழுந்தது. இந்த மோதிரத்தை விழுங்கிய குழந்தை மதிமாலா, சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி எடுத்தது. இதையடுத்து குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

உடனே எக்ஸ்ரே செய்ததில் உணவுக்குழாயின் மேற்பகுதியில் மோதிரம் இருப்பது தெரியவந்தது. குழந்தை மோதிரத்தை விழுங்குவதற்கு முன் உணவு சாப்பிட்டிருந்ததால் உடனடியாக வெளியே எடுக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மறு நாள் காலை மயக்க மருந்து கொடுத்து வீடியோ ஆப்டிகல் போர்சப்ஸ் மற்றும் ரிஜிட் எண்டோஸ்கோபி மூலம் மோதிரம் வெளியே எடுக்கப்பட்டது. குழந்தை நலமுடன் உள்ளது. இன்று டிஸ்சார்ஜ் செய்ய உள்ளோம்.இவ்வாறு தெரிவித்தார்.உடன் மருத்துவத்துறை கண்காணிப்பாளர் பாலமுருகன், காது மூக்கு தொண்டை மருத்துவப்பிரிவு துறைத்தலைவர் நாகசுப்பிரமணியன், ஆர்எம்ஓ ரபீக், மருத்துவர்கள் ஆனந்த், வைரவராஜன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: