11 புதிய மருத்துவ கல்லூரிகள் செயல்பட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்ப்பட்டு வருகிறது. இங்குள்ள 43 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 43 குழந்தைகளையும் பார்த்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: களியாம்பூண்டி கிராமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 43 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து விசாரித்தேன். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளின் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திறக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சிகளும் பரிசீலனையில் உள்ளன. டெல்டா பிளஸ் பாதிப்பு இருக்குமா என சந்தேகித்து 1000க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 10 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனைக்கூடம் 20 நாட்களில் அமையவிருக்கிறது. மூன்றாவது அலை வருமா? என்பது விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. முதல் அலை வந்தபோது படுக்கை வசதியும், 2வது அலை வந்தபோது ஆக்சிஜன் வசதியும் போதுமானதாக இல்லை. தற்போது இவையனைத்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 9 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் வசதியும், சுமார் 79 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.  3வது அலை வந்தாலும் சமாளிக்க முடியும்.

அரசு பொதுமருத்துவமனைகளில் குழந்தைகளுக்கென தனியாக கொரோனா சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. இதுவரை 1.44 லட்சம் தடுப்பூசிகள் வந்ததில் 1.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வர உள்ளது. சென்னையில் இணைய முன்பதிவு மூலமும், மற்ற இடங்களில் டோக்கன் முறையிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களை பற்றிய தகவல்களை வெளிப்படையாக சொல்லுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். இறப்பு தகவல்களை மறைக்கவேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் தற்போது 42801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: