தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தினுடைய தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கக்கூடிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக காங்கிரசின் மூத்த தலைவர்  பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

அவர் கடந்த 89 - 91 இடைப்பட்ட காலத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் இருந்தும், 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். அவரை சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 

இந்த ஆணையம் என்பது சிறுபான்மை மக்களுக்கான நல உதவிகள், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவை குறித்து முழுமையான பணிகளை மேற்கொள்ளும். சிறுபான்மை ஆணையம் என்பது திமுக தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் இந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் வாழக்கூடிய மத மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணி காத்திடவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் 89ம் ஆண்டு அப்போதைய முதல்வரால் துவங்கப்பட்ட இந்த ஆணையம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: