ஈரோட்டில் மின்பாதை பராமரிப்பு பணி-மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

ஈரோடு : ஈரோட்டில் மின் பாதை பராமரிப்பு பணி நேற்று நடந்தது. இதனை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் மின் தடை ஏற்படுவதை தடுக்க மின் பாதை பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மின்பாதை பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மின்பாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில், ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இடையங்காட்டு வலசு, மார்க்கெட், சத்தி ரோடு, திருநகர் காலனி, முத்தம்பாளையம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு மின்பாதைகளில் நேற்று மின் பராமரிப்பு பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்தது.

இதில், சம்பத் நகர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே நடந்த பணிகளை நேற்று ஈரோடு மண்டல தலைமை பொறியாளராக உள்ள முரளிதரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டது. மேலும், வலுவிழந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் கண்டறியப்பட்டு புதிதாக மாற்றம் செய்யப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழாமல் இருக்க இணை மின்கம்பங்கள் பொருத்தப்பட்டது.

இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது மக்கள் அருகில் இல்லாததை உறுதி செய்தபின்னே பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கும், மின் ஊழியர்களும் மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.  ஆய்வின்போது, ஈரோடு கோட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி, நகர செயற்பொறியாளர் ராமச்சந்திரன், நகர உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், இடையங்காட்டு வலசு உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மின்பாதை பராமரிப்பு பணிகள் ஈரோடு மாவட்டத்தில் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடந்துள்ளதாகவும் மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்தார்.பவானி: சித்தோடு பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சித்தோடு ஐஆர்டிடி காலேஜ், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ள உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த மின்பாதையில் வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், சுவிட்சில் உள்ள பழுதுகளை நீக்குதல், நில இணைப்புப் பரிசோதனை, கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

இப்பணிகளை மின்வாரிய தலைமை பொறியாளர் முரளிதரன், மேற்பார்வை பொறியாளர் இந்திராணி, செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பிரிவு பொறியாளர்கள் ராபின் சர்குணராஜ், பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் உயரழுத்த மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: