பைக் ரைட் போகலாமா?

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

காலையில் எழுந்து அவசர அவசரமாக கிளம்பி, இந்த டிராப்பிக்கில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் செல்வதற்குள் ஒவ்வொருவருக்கும் பெரிய மலையை கடந்து வந்தது போன்ற உணர்வு ஏற்படும். காரணம் வாகன நெரிசல். காலை எட்டு மணிக்கு ஏற்படும் இந்த வாகன நெரிசலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகத்தான் உள்ளது. டிராபிக் பிரச்னைக்கு முக்கிய காரணம் வாகன எண்ணிக்கைகளின் அதிகரிப்பு என்று தான் சொல்லணும்.

ஒருவர் மட்டுமே அலுவலகம் செல்ல ஒரு பெரிய காரை பயன்படுத்துகிறார்கள். அதே போல் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் 50% பேர் காரில் தான் பயணம் செய்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒரு வீட்டில் குறைந்தபட்சம் இரண்டு வாகனங்கள் இல்லை என்றால் ஆச்சரியம்தான்.

ஒவ்வொருவரும் ஒரு வாகனத்தை எடுத்து பயணம் செய்தால், டிராபிக் நெரிசல் ஒரு பக்கம் ஏற்பட்டாலும், அதில் இருந்து வெளியாகும் புகை நம்முடைய சுற்றுப்புறச் சூழலையும் பாதிப்படைய செய்கிறது. இதற்கு ஒரு தீர்வு கார் மற்றும் பைக்பூலிங் தான். இதற்கு மட்டுமல்லாமல் வாகனம் பழுதடைந்தாலும், புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கும் இப்போது ஆப்கள் வந்துவிட்டன. இவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜிக் வீல்ஸ்

ஒரு வாகனம் வாங்கும் போதும் சரி மற்றவர்கள் விற்கும் போதும் அந்த வாகனம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். பைக்கோ அல்லது காரோ எதுவாக இருந்தாலும் ஜிக் வீல்ஸ் ஆப் மூலம் வாங்கலாம், விற்கலாம். ஜிக் வீல்ஸ் நீங்கள் வாங்க விரும்பும் வாகனம் குறித்து முழு விவரங்கள் மட்டும் இல்லாமல் மற்ற வாகனத்தோடு ஒப்பிட்டு பார்க்கவும் முடியும். இதன் மூலம் நீங்கள் விரும்பும் வாகனத்தை எந்தவித குழப்பம் இல்லாமல் தேர்வு செய்யலாம்.

புதிய வாகனம் வாங்குவது மட்டும் இல்லை, உங்களிடம் இருக்கும் பழைய வாகனத்தை இதன் மூலம் விற்கவும் செய்யலாம். மேலும் மார்க்கெட்டில் உள்ள மற்ற வாகனம் குறித்த விவரங்கள் அவ்வப்போது உங்களின் செல்போனில் தெரிவிக்கப்படும். வாகனத்தை விற்க முற்படுபவர்கள் முதலில் இதனை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு வாகனம் குறித்த அனைத்து விவரங்களையும் புகைப்படத்துடன் அப்லோட் செய்தால் போதும். விரும்புபவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள். புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றாலும் அது குறித்த விவரங்கள், டீலர்கள் மற்றும் கடை குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதால் நீங்கள் விரும்பும் வாகனத்தை தேர்வு செய்யலாம்.

க்விக் ரைட்

இதுவும் கார் பூலிங் ஆப்தான். நம்மூரில் பெரும்பாலானவர்கள் காரில் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக  அலுவலகம் செல்பவர்கள். டிராபிக் நெரிசல், மாசு போன்ற பிரச்னைகளால் நம்மில் பலர் அவதிப்படுகிறார்கள். இவை இரண்டையும் இதன் மூலம் கட்டுப்

படுத்தலாம். ஒருவர் மட்டும் செல்லக்கூடிய காரில் நான்கு பேர் இணைந்தால் பெட்ரோல் செலவு குறைவு. அதே சமயம் பஸ், ஆட்டோக்களுக்கு கொடுக்கக்கூடிய கட்டண செலவும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

இந்த ஆப் பெங்களூரூ, ஐதராபாத், சென்னை, பூனா, கொச்சி, திருவனந்தபுரம், தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதுகாப்பு என்பது இப்போது அவசியமாகிவிட்டது. அதனால் இந்த ஆப்பினை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் அவர்கள் தங்களின் பயணத்தை பாதுகாப்பாக கழிக்கிறார்களா என்று கண்காணிக்கும் வசதியுள்ளது. மேலும் பயணத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால், உங்களின் பயணத்தை நீங்கள் தடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.

ரேபிடோ

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற பைக் மற்றும் கார்பூலிங் ஆப். ஒருவரிடம் கார் இருந்தால், அவர் வேலைப் பார்க்கும் அலுவலகத்திலோ அல்லது அதன் வழியே உள்ள நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் செல்வது தான் கார்பூலிங். இதற்கு யாரிடமாவது கார் இருக்க வேண்டும். கார் இல்லாதவர்கள் எப்படி கார்பூலிங் செய்வது.

அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் ரேபிடோ ஆப். இதன் மூலம் ஒருவர் அலுவலகம் செல்லும் போது அவ்வழியாக யாரெல்லாம் செல்ல இருக்கிறார்களோ அவர்கள் இவருடன் சேர்ந்து கொள்ளலாம். இதனால் பஸ் நெரிசலில் இருந்து தப்பிக்கலாம். அதே சமயம் ஒரு நாள் செலவு செய்யும் ஆட்டோ கட்டணத்தை 50% குறைக்கவும் முடியும். காரணம் ஒரு பயணத்தை ஐந்து பேர் சமமாக பிரித்துக் கொண்டால் அது லாபம் தானே.

இந்த ஆப் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் கார் மட்டுமில்லை பைக்பூலிங் வசதியும் உள்ளது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும், நீங்கள் செல்லும் இடத்திற்கு போக வேண்டிய காரோ பைக்கோ உங்கள் இருப்பிடம் தேடி வரும்.

முதலில் ரேபிடோ ஆப்பினை உங்கள் மொபைல் போனில் டவுண்லோட் செய்யுங்கள். பிறகு நீங்கள் செல்ல இருக்கும் இடத்தை

குறிப்பிடுங்கள். உங்கள் இடம் வந்த பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும்.

ஆப் கார் ரைட் பாதுகாப்பானதா என்று நினைக்க தோன்றும். வாகனத்தை செலுத்துபவர்களின் முழுவிவரங்கள் மற்றும் அவர்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் நன்றாக ஆய்வு செய்த பிறகு தான் அவர்கள் வாகனத்தை செலுத்த முடியும். சிறு பிழை இருந்தாலும் அவர்களால் வாகனத்தை செலுத்த முடியாது.

அதே சமயம் பைக்பூலிங் செய்யும் போது, பின்னால் அமர்பவர்களுக்கு தனி ஹெல்மெட் வழங்கப்படும். இதனால் விபத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆன்லைன் மூலமாக செயல்பட்டு வருவதால், கட்டணத்தையும் பேடிஎம், ஃபிரீசார்ஜ், மோபிவிக் மற்றும் ரேபிடோ வாலெட் மூலமாகவோ அல்லது நேரடியாக பணமாகவோ செலுத்தலாம்.

ஐவீல்ஸ்

கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் எப்போது மக்கார் செய்யும் என்று நாம் கணக்கிட முடியாது. சில சமயம் பஞ்சர் ஆகலாம் அல்லது வண்டி பாதி வழியில் நின்றுவிடலாம். மழை காலத்தில் சொல்லவே வேண்டாம். அந்த சமயத்தில் எங்கு மெக்கானிக்கை நாடுவது. ஐவீல்ஸ் ஆப் உங்களுக்கு அதற்கான தீர்வினை அளிக்கிறது.

இந்த ஆப் மூலம் உங்கள் வண்டி குறித்த பிரச்னைகளை பதிவு செய்தால் போதும், நீங்கள் இருக்கும் இடம் தேடி மெக்கானிக் பறந்து வருவார். ஆப் பயன்படுத்துவது மிகவும் எளிது. 24 மணி நேர சேவை என்பதால், இனி வாகனம் பழுதானாலும் கவலைப்பட அவசியம் இல்லை.

எஸ் ரைட்

பூனா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, தில்லி, பெங்களூரூ, கோயம்புத்தூர், புவனேஷ்வர், கொச்சி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் ஒரு வகை பூலிங் ஆப். இதனை உங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்தபிறகு, நீங்கள் செல்லும் இடத்தை குறிப்பிட்டால் போதும், அந்த வழியாக செல்லும் வாகனத்தை பற்றி விவரங்கள் உங்களின் செல்போனில் தெரிவிக்கப்படும்.

அதற்கு ஏற்ப நீங்கள் உங்களின் பயணத்தை நிர்ணயிக்கலாம். பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதால், அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறார்கள். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால், நீங்கள் கையில் காசு செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கார்த்திக் ஷண்முகம்

Related Stories: