மேற்கு வங்கத்தின் ஆளுநர் ஊழல்வாதி: மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் மீது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் மம்தா நேற்று தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில், ‘‘ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஒரு ஊழல்வாதி. 1996ம் ஆண்டு ஜெயின் ஹவாலா மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் உள்ளது. ஒன்றிய அரசு ஏன்  இன்னும் அவரை ஆளுநராக பொறுப்பு வகிக்க அனுமதித்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. அது பற்றி ஒன்றிய அரசுக்கு தெரியவில்லை என்றால் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார்.

வடக்கு வங்கத்தில் அவர் திடீரென ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதுவும் பாஜவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை மட்டுமே சந்தித்துள்ளார். மேற்கு வங்கத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான சதித்திட்டம் இது என்று யூகிக்கிறேன். ஆளுநரை மாற்றுமாறு ஒன்றிய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனாலும், என் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’என்றார். இந்த குற்றச்சாட்டுக் களைஆளுநர் தன்கர் மறுத்துள்ளார். ஹவாலா மோசடி வழக்கு குற்றப்பத்திரிகையில் தனது பெயர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: