சட்டதிட்டங்களை மீறி கட்டடங்கள் வரக்கூடாது விரைவில் துணைநகரங்கள் அமைக்கப்படும்: வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 28 கோரிக்கைகள் அடங்கிய முனுவை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினர்.  பின்னர், அமைச்சர் முத்துசாமி தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வீட்டுவசதித்துறையில் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் நடப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதேபோல், பதவி உயர்வு, இறக்கும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் போன்றவை செயல்படுத்தப்படாமல் உள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர். ஒவ்வொரு கோரிக்கையும் ஆய்வு செய்யப்படும்.சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தங்களுக்கு வரும் கோப்புகளை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சிஎம்டிஏ அலுவலகத்தில் இதற்காகவே ஒரு தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதேபோல், துணை நகரங்கள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வரின் கவனத்தில் உள்ளது. அதை செயல்படுத்துவதற்கான ஆய்வுப்பணி துவங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் மூலம் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு பத்திரம் இன்னும் கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே, பத்திர பதிவை உடனே செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுளார்.  கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பெரிய திட்டம் கொண்டுவருவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுவரை திட்ட அனுமதி கொடுத்தது எல்லாம் சட்டத்தை மீறி இருக்கிறது.

இவை நீதிமன்ற உத்தரவின் மேல் உள்ளது. யாரையும் கெடுதல் செய்ய வேண்டும். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசிற்கு இல்லை.  ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு உதவிகளை செய்வோம். இனிமேல் எக்காரணம் கொண்டும் சட்டதிட்டங்களை மீறிய கட்டிடம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கட்டிடத்தொழில் செய்பவர்களும் சட்டதிட்டங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் வேலைகளை விரைவாக செய்துக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு கூறினார்

Related Stories: