அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்த இன்ஜினியர் கைது

சென்னை: ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு 2 முறை சென்று வந்த கப்பல் சர்வீஸ் இன்ஜினியரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.  ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, துபாயிலிருந்து ஷார்ஜா வழியாக சக்திவேல் என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், அவர் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தை  சேர்ந்த சக்திவேல் (49) என்பதும், கடந்த 2018ம் ஆண்டு முதல் துபாயில் ஒரு  தனியார் கப்பல் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. மேலும், இவர், கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் பணி காரணமாக, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் துபாய்க்கு திரும்பியதும் தெரியவந்தது.  கடந்த 2014ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, ஏமன் மற்றும் லிபியா நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் செல்லக்கூடாது. இதை மீறி தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்று வரும் இந்தியர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரித்துள்ளது.

அதை மீறி சக்திவேல் ஏமன் நாடு சென்று திரும்பியுள்ளதால், இந்திய குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏமன் நாட்டில் சக்திவேல் தீவிரவாத பயிற்சி பெற்று, சென்னை திரும்பினாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

Related Stories: