பழைய நோட்டுகளை மாற்ற மத்திய அரசு மறுப்பு ஏழுமலையானின் ₹50 கோடிக்கு சிக்கல்

திருமலை, ஜூன் 26: ரத்து செய்யப்பட்ட பழைய ₹500, ₹1,000 நோட்டான ₹49.70 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் தேவஸ்தான அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பல கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்துகின்றனர். மத்திய அரசு ₹500, ₹1,000 நோட்டுகளை ரத்து செய்தபோது  பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தினர்.  இதுவரை பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய நோட்டுகளில் ₹49.70 கோடி தேவஸ்தானத்திடம்  உள்ளது.இதில், ₹1.8 லட்சம் ₹1,000 நோட்டுகளும், ₹6.34 லட்சம் ₹500 நோட்டுகளும்உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் நான்கு முறை இந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர் சுப்பாரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும், கடந்த 2017ம் ஆண்டு முதல் பலமுறை மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தேவஸ்தானம் குழம்பியுள்ளது.  ‘தேவஸ்தானத்தின் பழைய நோட்டுகளை வங்கியில்  டெபாசிட் செய்ய அனுமதி அளித்தால்,  பிற நிறுவனங்கள் மற்றும் மற்ற கோயில் அறக்கட்டளைகளும் இதேபோன்ற கோரிக்கையை வைக்கும்,’ என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பணத்துடன் பக்தி பிணைப்பு  இருப்பதால் அதை அகற்ற முடியாத சூழ்நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளனர். இதனால், அந்த பணம்  அப்படியே தேவஸ்தான கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய  அரசு தீர்வு காணாவிட்டால் ₹49.70 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை அழிக்க வேண்டியதை தவிர தேவஸ்தானத்திற்கு வேறு வழி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: