புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைவு-ஆய்வின்போது கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கவனிப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று இரட்டை இலக்கத்தில் குறைந்துள்ளது.

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாற்றும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பட்டி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கவனிப்பு மையம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொரோனா கவனிப்பு மையத்தில் 60 படுக்கைகள் கொண்டு கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையம் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவிலும், அறிகுறி இல்லாதவர்கள் புதுப்பட்டி கொரோனா கவனிப்பு மையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதிகளிலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நோய் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின் போது அரசு மருத்துவர் சந்தோஷ், தாசில்தார் புவியரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: