பெட்ரோல் குண்டு வீச பயிற்சியளித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் உடல் நலக்குறைவால் மரணம்: மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி கீதன் (23), பெட்ரோல் குண்டு தயாரித்து, அதை எப்படி வீசுவது என தனது நண்பர்களான திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா குடிசை பகுதியை சேர்ந்த கமல் (எ) கமல்பாய் (37), ஜான்சன் (22), கார்த்திக் (23), அக்பர் அலி (எ)அப்பு (21) ஆகியோருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், கீதன், கமல் (எ) கமல்பாய், ஜான்சன், கார்த்திக், அக்பர் அலி ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போதுமான இடம் இல்லாததால் மதுராந்தகம் கிளை சிறையில் நேற்று முன்தினம் அதிகாலை அடைத்தனர்.

இதில், கமல் (எ) கமல்பாய்க்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, மதுராந்தகம் கிளை சிறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கமலை சிறை காவலர்கள் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுபற்றி மதுராந்தகம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உயிரிழந்த கமலின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு சம்பவம் குறித்து மதுராந்தகம் கிளை சிறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு வந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழந்தால் அவரது உறவினர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரீனா முன்னிலையில் வீடியோ பதிவுடன் கமல் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அப்போது கமலின் சகோதரர் விஜயகாந்த் உடன் இருந்தார்.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கமல் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று மதுராந்தகம் டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் கமலின் உடல் உயர் போலீசார் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: