அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரத்துறையில் 25,689 கோடி இழப்பு: இந்திய தணிக்கை துறை அறிக்கையில் அம்பலம்

சென்னை: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரத்துறையில் 25,689 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கை துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2013-14ல் மின் தேவை 0.93 லட்சம் மில்லியன் யூனிட் என இருந்த நிலையில், 2017-18ல் 1.06 லட்சம் மில்லியன் யூனிட் ஆக அதிகரித்தது. இவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஏற்கப்பெற்ற ஆதாரங்களான தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் (டான்ஜெட்கோ) சொந்த மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்டது.

மீதமுள்ளவை தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. 2017-18ல் மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மொத்த மின் கொள்முதல் செலவு 1,15,336 கோடியாக இருந்தது.  தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம் கடந்த 2013-14 காலகட்டத்தில் 24,164.84 மில்லியன் யூனிட்டிற்கு 11,873 கோடியாக இருந்தது. 2017-18 கால கட்டத்தில் 29,758.38 மில்லியன் யூனிட்டிற்கு 13,564 கோடியாக அதிகரித்தது. இதற்கு சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் நிறுவு திறன் தேவையான அளவு அதிகரிக்கப்படாதது, மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்த செயலாற்றல், மத்திய மின் உற்பத்தி நிலைய திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்களே காரணங்கள் ஆகும்.

டான்ஜெட்கோவின் சொந்த நிறுவப்பட்ட திறன் 2013-18 காலகட்டத்தில் 5632 மெகாவாட்டில் இருந்து 7831 மெகாவாட்டாக அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் 5 பெரிய அனல் மின் திட்டங்களை தொடங்குவதென டான்ஜெட்கோ திட்டமிட்டிருந்த போதும், இவற்றுள் ஒரு திட்டம் கூட செயல்பட தொடங்கவில்லை.  இதன்காரணமாக 2381 கோடி கூடுதல் செலவினங்களை டான்ஜெட்கோ ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  டான்ஜெட்கோவிடம் அனல், நீர் மற்றும் எரிவாயு மூலம் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில், அனல் மற்றும் நீர் மின் நிலையங்களின் குறைந்த நீர் இருப்பு போன்ற காரணங்களால் கடந்த 2013-18ல் 41,076 மில்லியன் யூனிட் அளவிற்கு உற்பத்தி குறைவு ஏற்பட்டது.

மத்திய மின் உற்பத்தி திட்டங்களான என்டிஇசிஎல், என்எல்சி விரிவாக்கம் 2 மற்றும் என்டிபிஎல் திட்டங்களில் இருந்து டான்ஜெட்கோவிற்கு  மின் ஒதுக்கீடு ெசய்யப்படிருந்தது கண்டறியப்பட்டன. இத்திட்டங்கள் 2012க்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், 2012-15க்கு இடையே தான் பயன்பாட்டிற்கு வந்தது. இத்திட்ட தாமதத்தால் மின் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் 16,839 மில்லியன் யூனிட்டிற்கு 2099 கோடி அதிக செலவு ஏற்பட்டது.  மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் அளவு 2013-14,  3972 என்ற அளவில் இருந்தது. 2017-18ல் 6194 ஆக மெகா வாட்டாக அதிகரித்தது. புதிதாக செயல்பட தொடங்கிய 6 திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது.

 இதே நேரத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் ராமகுண்டம், தால்ச்சர் முதலிய நிலையங்களில் இருந்து தான் ஒதுக்கீடு 131.88 வாட் குறைக்கப்பட்டதன் காரணமாக, 2015-18 காலகட்டத்தில் டான்ஜெட்கோவிற்கு 4121 மில்லியன் யூனிட் பெறப்பட்ட நிலையில், 544 கோடி தவிர்த்து இருக்கக் கூடிய செலவு ஏற்பட்டது.

* கடந்த 2013-18 காலகட்டத்தில் மின் வழங்குவோரிடம் இருந்து குறுகிய கால கொள்முதலாக யூனிட்டிற்கு 5.50 என்ற  அதிக பட்ச விலையில் வாங்கிய வகையில் டான்ஜெட்கோவிற்கு 1687 கோடி தவிர்த்து இருக்க கூடிய செலவு ஏற்பட்டது.

* 11 மின் வழங்குவோரிடம் ஒரு யூனிட்டிற்கு 4.91 கட்டணத்தில் வழங்க ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த 11 மின் வழங்குவோரில் 9 மின் வழங்குவோர் டிசம்பர் 2014க்கு பின்னரே மின் வழங்குதலை தொடங்கினர். இந்த குறைக்கப்பட்ட ஒப்பந்த காலத்தில் யூனிட்டிற்கு 4.95 முதல் 5.23 வரை கட்டணம் வழங்கப்பட்டது. இதனால், 2018 மார்ச் காலகட்டத்தில் 712 கோடி அதிக கட்டணமாக எட்டு மின் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டது.

* கடந்த 2015ல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது பெரும்பாலன இடங்களில் மின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் டான்ஜெட்கோ ேகஎஸ்கே, ஓபிஜி, ஜிண்டலிடம் இருந்து முழு அளவில் மின் வழங்கலை பெற முடியவில்லை. அந்த காலகட்டத்தில் விலை எதுவும் கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஒப்பந்த விதிகளின் படி பாதிக்கப்பட்டவர் அதற்கான அறிவிப்பை தொலை தொடர்பு சரி செய்யப்பட்ட பிறகு ஒரு நாளுக்குள் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தவறியதால் 57.86 கோடி செலவிட நேரிட்டது.

* மாநிலத்திற்குள்ளே அமைந்த விற்பனையாளர்களிடம் இருந்து குறுகிய கால மின்சாரம் பெறுவதற்கான கோரிக்கைகளை டான்ஜெட்கோ வரவேற்றது. இந்த விற்பனையாளர்களிடம் இருந்து 3.99 என்ற குறைந்த விலையில் மின்சாரம் பெற முடிந்தது. ஆனால், கடந்த 2013 ஜூன் முதல் 2016 மே மாதத்தில் மட்டும் யூனிட் 5.50 விலை கொடுக்கப்பட்டு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டான்ஜெட்கோவிற்கு 1055 கோடி அதிக செலவு ஏறர்பட்டது.

*  மாநிலத்திற்குள்ளே அமைந்த மின் வழங்குவோரிடம் இருந்து மின்சாரம் பெறும் காலம் 2015 செப்டம்பரில் முடிவடைந்தது. அடுத்த டெண்டர் இறுதிசெய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக 2015 அக்டோபர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் 2015 அக்டோபர் முதல் 2016 மே வரையிலான காலத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 5.05 ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், டெண்டர் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், 2015 அக்டோபர் முதல் 2016 ஜனவரி வரை மின் வழங்கியோருக்கு அதிகப்படியான விலை யூனிட்டிற்கு 5.50 வழங்கப்பட்டன. இதன் காரணமாக நீட்டிக்கப்பட்ட காலக்கட்டத்தில் 15.28 கோடி அதிக செலவு ஏற்பட்டது.

* டான்ஜெட்கோ அல்லது மின் உற்பத்தியாளர் செய்யும் மாறுதல்களுக்கான இழப்பீட்டு தொகை கடந்த 2015ல் வெளியிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளின் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் மின் செலுத்தலை, நாளின் 96 பகுதிக்குள் கணிக்க அதன் அடிப்படையில் விலைப்பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், மின்பகிர்மான வட்்டங்கள் அதிக செலவு/ வசூலிக்கபடாததால் 52 கோடி இழப்பு ஏற்பட்டது.

* இணை உற்பத்தி நிலையங்களுடன் மின் வழங்கலுக்காக நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு அதே மின்சாரத்தை குறைகால கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக பெற்றதன் மூலம் 93.41 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

* 2014-15ல் மின்சாரத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு ₹12,763 கோடி ஆகும். 2018-19ல் 13,176 கோடியாக இருந்தது. இறுதி செய்யப்பட்ட கணக்குகளின் படி ஒரு பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமே ₹83 கோடி லாபத்தை ஈட்டியது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் 13,259 கோடி இழப்பை அடைந்தன. கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு முறையே 12,333 கோடி, 13,176 கோடியாக அதிகரித்தது. இதற்கு மின் கொள்முதல், உற்பத்தி செலவோடு பணியாளர் மற்றும் நிதி செலவினங்களின் அதிகரிப்பே முக்கிய காரணங்கள் ஆகும்.

* கடந்த 2017-18ல் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு 12,430 கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்கு, நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஊதிய உயர்வால் ஏற்பட்ட ஊழியர் செலவு 1971 கோடி, மின் கொள்முதல் செலவு 2941 கோடி அளவிற்கு அதிகரித்தே முக்கிய காரணம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்காத அதானி, ஜின்டால்

நடுத்தர கால அடிப்படையில் 3 மின் கொள்முதல் ஒப்பந்தங்களை டான்ஜெட்கோ செய்திருந்தது. நேஷனல் எனர்ஜி டிரேடிங் அன் சர்வீசஸ், ஜிண்டல் பவர் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டன. இதில், நேஷனல் என்டர் பிரைசஸ் 5 ஆண்டுகளுக்கு 100 மெகா வாட் மின்சாரம் கடந்த 2012 பிப்ரவரி 1ம் தேதி வரை யூனிட் மின்சாரம் 4.88க்கும், அதானி, ஜிண்டல் நிறுவனத்துக்கு 2012 செப்டம்பர் முதல் 2017 ஆகஸ்ட் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தலா 200 மெகாவாட் மின்சாரம் யூனிட்டிற்கு 4.92 மற்றும் 4.99க்கும் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஜிண்டல், அதானி நிறுவனம் மின் வழங்கலை 2013 மே வரை தொடங்கவில்லை. இதனால், டான்ஜெட்கோ யூனிட்டிற்கு 5.50க்கு மின் விற்பனையாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கிய வகையில் 1055 கோடி கடும் இழப்பு ஏறபட்டது.

424 கோடியை வாரி இறைத்த அதிமுக அரசு

எல்எஸ்ஹெச்எஸ் எனும் எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தியாளரான ஜிஎம்ஆர் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்தது. கடந்த 2014 பிப்ரவரி 14ம் தேதி முதல் 2015 பிப்ரவரி 14ம் தேதி வரை வரை சராசரியாக யூனிட்டிற்கு 12.74 என்ற விலையில் 824 கோடியில் 737.40 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்கியிருந்தது. இந்த காலக்கட்டத்தில் சந்தையில் ஒரு யூனிட் 3.39 முதல் 5.42 ஆக இருந்தது. 424.43 கோடி இழப்பு ஏற்பட்டது.

மலிவு விலைக்கு வாங்க மறுப்பு மின்துறைக்கு 349 கோடி இழப்பு

என்எல்சி-1 நிலையத்தில் இருந்து 2015-18 காலகட்டத்தில் மொத்த ஒதுக்கீடான 475 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் யூனிட் ஒன்றுக்கு 3.45 முதல் 5.29 என்ற விலையில் எஸ்எல்டியால் 4 பிறநிலையங்களில் இருந்து மலிவான மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 2.11 முதல் 5.21 என்ற விலையில் பெறுவது நிறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் டான்ஜெட்கோ 4,688 மில்லியன் யூனிட் ஆக பெற்ற நிலையில் 349 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

605 கோடி ரூபாய் அபேஸ்

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களின் மின் நிலையங்கள் செயல்பட தொடங்குவதற்கான கால அவகாத்தை டிஎன்இஆர்சி நீட்டித்த காரணத்தால் சூரிய மின்சக்தி கொள்முதலுக்காக அதிக விலை கொடுக்க நேரிட்டது. இதன் காரணமாக, டான்ஜெட்கோவிற்கு ₹605 கோடி அதிக செலவு ஏற்பட்டது. இணை உற்பத்தி நிலையங்களுடன் மின் வழங்கலுக்காக நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு அதே மின்சாரத்தை குறைகால கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக பெற்றதன் மூலம் 93.41 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரியில் கொள்ளை

டான்ஜெட்கோ மூலம் கடந்த 2019ல் 4320 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் உடைய 5 நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களை கொண்டு இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலக்கரி போக்குவரத்து போது 2256 கிலோ கிராம் வரை மொத்த உள்ளுரை வெப்ப மதிப்பு மிகப்பெரும் வீழ்ச்சி இருந்தது. மின் கட்டணங்களை கணக்கிட டான்ஜெட்கோ பின்பற்றிய முறை 1805 கோடி அளவு அதிகமாக இருந்தது. அனல் மின் நிலையங்களில் உயர்தர நிலக்கரியை உபயோகித்த பிறகும் குறிப்பிட்ட நிலக்கரி பயன்பாடு குறையவில்லை.

அடம் பிடித்த அதானி அதானிக்கு யூனிட்டிற்கு 3.50, ஜிண்டல்

யூனிட் 3.25க்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதானி நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், மின் கொள்முதல் ஒப்பந்தங்களை நீட்டிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அதிக விலையான யூனிட்டிற்கு 4.02 முதல் 4.47 வரையில்

கொள்முதல் செய்தது. இதனால்,  கடந்த 2017 அக்டோபர் முதல் மார்ச் 2018 வரையிலான காலக்கட்டத்தில் 9.48  கோடி செலவு ஏற்பட்டது.அதானி நிறுவனம் கடந்த 2012 ஜனவரி 5ம் தேதி முதல் 2016 ஆகஸ்ட் 31ம் தேதி வரை சொந்த ஆதாரங்களிடம் இருந்து  இல்லாமல், மாற்று ஆதாரங்களிடம் இருந்து மின் வழங்கல் செய்தது. இதற்காக டான்ஜெட்கோ திறன் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு திறன் கட்டணம் செலுத்தப்பட்டது. இதனால், 101 கோடி தவிர்த்திருக்க கூடிய செலவு ஏற்பட்டது.

குறுகிய கால கொள்முதலில் கொள்ளை

தமிழகத்துக்கு  கடந்த 2013-18 காலகட்டத்தில் மின் வழங்குவோரிடம் இருந்து குறுகிய கால கொள்முதலாக யூனிட்டிற்கு ₹5.50 என்ற அதிக பட்ச விலையில் வாங்கிய வகையில் டான்ஜெட்கோவிற்கு 1687 கோடி தனியாரின் பாக்கெட்டை நிரப்பியது.

Related Stories: