ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: ரகசிய தகவலை தொடர்ந்து நடவடிக்கை

திருச்சி: விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானமானது தமிழகத்திலிருந்து காலியாக சென்று வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகளிடம் வெளிநாடுகளில் உள்ள தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தங்கத்தை கொடுத்து அனுப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சார்ஜாவில் இருந்து நேற்று காலை திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவர்கள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான 6 பயணிகளை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில் அவர்களிடமிருந்து 6,231 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் இந்திய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். மேலும் அதனை கடத்தி வந்த 6 நபர்களிடம் மத்திய வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>