அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள்-கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு

அரவக்குறிச்சி : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட கலெக்டர் அங்கிருந்த மக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார். பின்னர் அப்பகுதயில் வீடுவீடாக கொரேனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் யாராவது இருக்கின்றார்களா என்பது குறித்து களப்பணியாளர்கள் நேரில் விசாரித்து கணெக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்ட கலெக்டர் வீடுகளில் இருந்தவர்களிடம் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வசித்து வந்த பகுதியான ஆரியூர் கிராமத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களிடம் கலந்துரையாடி அனைவரும் ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று தொற்றுக்கான அறிகுறிகளுடன் யாராவது உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் புங்கம்பாடி மேல்பாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த முனியாண்டி என்ற முதியவர், தனக்கு பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடங்களாகியும் முழுமையடையாமல் இழுத்தடிக்கப்படுகின்றது, இதனால் வீடின்றி குடிசையில் வசிக்கும் நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

உடனடியாக அவரையும் அழைத்துக்கொண்டு மனுதாரரின் வீடு அமைந்துள்ள புங்கம்பாடி மேல்பாகம் ராமநாதபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனிக்கு நேரில் சென்ற கலெக்டர் அங்கு கட்டப்பட்டுள்ள வீட்டினை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது தரைதளத்தில் சிமெண்ட் பூச்சு இல்லாமலும் கழிவறை கட்டப்படாமலும் இருப்பதை பார்வையிட்ட அவர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் உரிய நேரத்தில் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான தொகை அவரது வங்கிக்கணக்கில் முறையாக வரவு வைக்கப்பட்டதா என்று பயனாளியிடம் கேட்டறிந்தார்.

பின்னர் 10 நாட்களுக்குள் பயனாளியின் வீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் கலெக்டர் தெரிவிக்கையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் சார்பில் ரூ.1.20 லட்சமும் மாநில அரசின் சார்பில் ரூ.50000 வழங்கப்படுகின்றது. தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ.12000 வழங்கப்படுகின்றது என்றார். மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் பயனாளிகளே 100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: