கொரோனா 3வது அலையை முறியடிக்க தயார் நிலையில் உள்ளோம்: விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர்(விராலிமலை) பேசியதாவது:  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், கொரோனா 3வது அலை வரும் என்று எச்சரித்து இருக்கிறார். 3வது அலை வருமா? வராதா? என மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வரும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்றவாறு சுகாதார கட்டமைப்புகளை பன்மடங்கு அதிகப்படுத்த வேண்டும். 3வது அலையை சந்திக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.  3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கக்கூடும் என்கிறார்கள்.  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:  தமிழக முதல்வர் தொடர்ந்து பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதினார். தொலை பேசியிலும் பேசினார். தமிழக அரசின் கடும் நடவடிக்கையால் ஒரு நாள் தொற்று 7,427 என்ற நிலைக்கு சரிந்துள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் தொற்று முற்றுபெறும் நிலை தமிழகத்தில் உருவாகும்.  ஒரு மருத்துவமனையில் தீவிர கொரோனா சிகிச்சை பிரிவுக்கு நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். எந்த தலைவரும்  இதுவரை இப்படி ஐசியு வார்டுக்கு சென்றது இல்லை.  தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் ஒதுக்கீடு ஜூன் மாதம் 42 லட்சமாக இருந்தது. ஜூலை மாதம் 71 லட்சமாக தருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  இதற்கு காரணம் ஒன்றிய அரசுக்கு முதல்வர் கொடுத்த அழுத்தம் தான் காரணம். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 கோடிக்கு மேலான தடுப்பூசி தமிழகத்துக்கு வேண்டும். தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும்.

மக்கள் இயக்கமாக மாற்றியது முதல்வர் தான். 3வது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றரை மாதத்தில் மருத்துவமனைகளில் மிகச் சிறந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 3வது அலை வரக்கூடாது. வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

1 பிளஸ் 1 பெட்

சபாநாயகர் அப்பாவு: 3வது அலையில்  குழந்தைகள் பாதிக்கப்பட்டால், தாயும், உடன் இருக்கும் வகையில், 1 பிளஸ் 1 படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி பேசினார். திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இந்த படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: