நிதித்துறை சார்பில் சட்டமுன்வடிவு அறிமுகம்

சென்னை: சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்ட முன்வடிவு ஒன்றை அறிமுகம் செய்தார். அந்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: 15வது நிதிக் குழுவானது தனது 2021-2026க்கான அறிக்கையில், எரிசக்தி துறை குறித்த சில செயல்திறன் அளவுகோலின் அடிப்படையில், 2021-2022 முதல் 2024-2025 வரையிலான கால அளவினை உள்ளடக்கிய பரிந்துரை காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் மாநிலங்கள் ஆண்டொன்றிக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.05 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கான பரிந்துரைத்துள்ளது.மேலும் நிதிக்குழுவானது, மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன் பெறுவதற்கான வரம்பினை 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 முதல் 2025-2026 ஆண்டுகளில் முறையே 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக பரிந்துரைத்துள்ளது.

நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதி நிலை பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டில் 3 விழுக்காடு வரை குறைப்பதற்குமான கால வரம்பினை குறித்தபடி 2024 மார்ச் 31 வரை நீட்டிக்க, 2003ம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகத்தில் பொறுப்புடமை சட்டத்தை அரசானது முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து இந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறப்பட்டது

Related Stories: