ஆன்லைன் தேர்வு எழுதும் பொறியியல் மாணவர்களுக்காக தபால் நிலையங்களை கூடுதலாக 2 மணி நேரம் திறக்க கோரிக்கை

திருப்போரூர்,: கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆன்லைன் முறையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தப்படுகிறது. ஆன்லைன் முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெள்ளைத்தாளில் விடைகளை எழுதி அதை பெற்றோர் கையொப்பத்துடன் சீலிட்ட கவரில் வைத்து அதே நாளில் அஞ்சலகங்களில் விரைவு தபால் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டும்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தபால் நிலையங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பகல் 2 மணி வரையும், மற்ற பகுதிகளில் பகல் 1 மணி வரையும் இயங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கேள்விகளும், அதற்கான விடைகளும் எழுதி முடிக்க பகல் 1 மணி வரை மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தபால் நிலையங்கள் மூடப்படுவதால் விடைத்தாள்களை அதே நாளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விதிமுறை தெரியாமல்  மறுநாள் அனுப்பிக்கொள்ளுமாறு தபால் அலுவலக ஊழியர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

ஒரு சில ஊழியர்கள் மட்டுமே மனிதாபிமானத்துடன் இந்த விஷயத்தை அணுகி மாணவர்களிடமிருந்து விடைத்தாள்களை பெற்று காலதாமதமாக வந்தாலும் விரைவு தபால் மூலம் அனுப்பிவைக்கின்றனர். சென்னை மற்றும் தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு சென்று விரைவு தபால் மூலம் விடைத்தாள்களை அனுப்புங்கள் என மாணவர்களிடம் தபால் ஊழியர்கள் கூறி திருப்பி அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தபால் அலுவலகத்தின் நேர நடைமுறை காரணமாக பல கேள்விகளுக்கு பதில் எழுதாமல் 12.30 மணிக்கே தேர்வை முடித்து தபால் நிலையத்திற்கு சென்று விடைத்தாள்களை அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள்களை அன்றே அனுப்பும் நடைமுறையை மாற்றி மறுநாள் அனுப்பலாம் என்று விதிமுறைகளை தளர்த்தினால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர் அல்லது மத்திய அரசு தபால் நிலையங்களில் 3 மணி வரை விரைவு தபால்களை அனுமதிக்கவேண்டும் என்ற மற்றொரு கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

Related Stories: