மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம் பேய் விரட்டுவதாக கூறி சிறுவன் அடித்து கொலை: தாய் உள்பட 3 பேர் கைது

கண்ணமங்கலம்: பேய் ஓட்டுவதற்கு அழைத்து சென்றபோது வலிப்பு வந்ததால் சிறுவனை அடித்து கொலை செய்த தாய், 2 சித்திகளை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி திலகவதி. இவர்களது மகன் சபரி(7). கார்த்திக் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து திலகவதி மகனுடன் வேலூர் அடுத்த அரியூர் ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் வசித்துள்ளார். சிறுவன் சபரிக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. ஆனால், உறவினர்கள் சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். அதை நம்பி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பேய் ஓட்டுபவரிடம் காண்பிக்க சபரியை திலகவதி தனது தங்கைகளான கவிதா(28), பாக்கியலட்சுமி(26) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில்  புறப்பட்டார்.

 இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றதும் அவர்களை டிரைவர், இறக்கி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவானதால், பேரூராட்சி அலுவலகம் முன் தங்கினர். நேற்று அதிகாலை 3 மணியளவில் சபரிக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனுக்கு மீண்டும் பேய் பிடித்துவிட்டதாக நினைத்த தாய் திலகவதி உட்பட 3 பேரும் சேர்ந்து பேயை விரட்ட சபரியை அடித்துள்ளனர். இதில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேரும் சேர்ந்து கை, கால்களையும் கழுத்தையும் அழுத்தியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக சபரி இறந்தான்.

உடனே 3 பேரும் கதறி அழுதனர். இதுபற்றி தகவலறிந்து கண்ணமங்கலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் வலிப்பு நோயால் துடித்த சிறுவனுக்கு பேய் பிடித்ததாக நினைத்து தாய் உட்பட 3 பேரும் சேர்ந்து அடித்து கழுத்தை அமுக்கியதில் இறந்தது தெரியவந்தது. இது மூட நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>