சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்: 24ம் தேதி முதல்வர் பதிலுரையாற்றுகிறார்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடக்கிறது. 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவையின் முதல்கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. ஆளுநர் உரையாற்றிய பின்னர், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்தார். அதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்தது.  கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி. செழியன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறும். தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும். இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மறைந்த நடிகர் விவேக், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் முதலாவது சட்டமன்ற மேலவை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ெமாழியப்பெற்று விவாதம் தொடங்கும்.

22ம் தேதி (நாளை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 24ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். தொடர்ந்து சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்களும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: