தொற்று பரவல் குறைந்து வருவதால் சென்னையில் உள்நாட்டு விமானங்கள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மீனம்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைவதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சி, மதுரை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. மே 21ம் தேதி அதிகபட்ச பாதிப்பாக 36,184 ஆக இருந்தது. தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளாலும், தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியதாலும் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தையே மிரட்டி கொண்டிருந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பெருமளவு குறைந்து விட்டது. தொற்றில் இருந்து குணமடைந்து திரும்புவோரின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் மக்களிடையே பீதி குறைந்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் தொற்று பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் வெகுவாக குறைந்தது. இதனால் விமான சேவைகளும் பெருமளவு குறைந்திருந்தன. ஒரு நாளுக்கு 60ல் இருந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்தில் இருந்து, 3 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல், தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு வந்தன. தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த 3 வாரங்களாக பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. மே மாத கடைசி  வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் பேர் பயணித்தனர்.

அரசு ஊரடங்கில் பெருமளவு தளர்வுகளை அறிவித்துள்ளதால், கடந்த 2 தினங்களாக பயணிகள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடந்த 11ம் தேதி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து பயணிகளும் 5 ஆயிரத்தை கடந்திருந்தது. இது, நேற்று ஒரே நாளில் 127 விமானங்களாக அதிகரித்தன. பயணிகளின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தன. இன்றும் விமானங்கள், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை-திருச்சி இடையே கடந்த 2 மாதங்களாக நாளொன்றுக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது 2 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரைக்கு 3 விமானங்களாக இருந்தது, 5 விமானங்களாகவும், பெங்களூருக்கு 3 விமானங்களாக இருந்தது 6 விமானங்களாகவும், டெல்லிக்கு 9 விமானங்களாகவும், மும்பைக்கு 6 விமானங்களாகவும், ஐதராபாத்திற்கு 4 விமானங்களாகவும், அந்தமானுக்கு 3 விமானங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களிடையே இ-பதிவு இல்லாமல் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்  சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க வாய்புள்ளது. இது ஊழியர்கள், அதிகாரிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>