ஆண்டிபட்டி அருகே பொதுமக்களைஅச்சுறுத்தும் பழமையான குடிநீர் தொட்டி-புதிய தொட்டி கட்ட கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் 20 ஆண்டு பழமையான குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராஜதானி ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் விநியோகத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டிக்கு பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 20 ஆண்டு பழமையான மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதன் அருகில் ரேஷன் கடை, தபால் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்போதும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் சிறுவர், சிறுமியர் தொட்டி அடிப்பகுதியில் தான் விளையாடி வருகின்றனர். சிதிலமடைந்து உள்ள மேல்நிலை தொட்டியை இடித்து புதிய தொட்டி கட்டித்தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பழமையான மேல்நிலைத் தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: