கொரோனா பாதுகாப்பு விதிமீறி செயல்பட்ட மீன் அங்காடிக்கு சீல் : 5 ஆயிரம் அபராதம்

தாம்பரம்: ஊரடங்கு தளர்வில் காய்கறி, மளிகை பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், டீ கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் (பார்சல் மட்டும்) இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும், பேக்கரி, உணவகங்கள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவற்றிற்கும் அனுமதி தரப்பட்டது.  அதேவேளையில், தமிழக அரசு அறிவித்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல் முதலான கொரோனா விதிகள் முறையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டது. மாநகராட்சியினர், சுகாதார துறையினர் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.    

 

இந்நிலையில், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் செம்பாக்கம் பகுதியில் நேற்று தனியார் மீன் அங்காடி ஒன்று, தமிழக அரசு விதித்த கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாமல் இயங்கி வந்தது. தகவலறிந்த செம்பாக்கம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மீன் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்திருப்பது தெரிந்தது. இதனையடுத்து, அந்த மீன் அங்காடிக்கு சீல் வைத்ததோடு, அதன் உரிமையாளருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: