அதிகாலை முதல் 50% பயணிகளுடன் எம்டிசி பஸ்கள் இயங்க தொடங்கியது; அரசு அறிவிப்பால் அடித்தட்டு மக்கள், பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் 50 சதவிகித பயணிகளுடன் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கத்தொடங்கியது. இதனால் அலுவலகம், தனியார் வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும்  நிம்மதியடைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா 2வது அலையினால் மக்களின் நிலை கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து பஸ் ஸ்டாண்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு காலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்கத்தொடங்கின.

இதில் பொதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்தனர். நீண்ட நாட்களாக பேருந்து சேவை இல்லாததால் அலுவலகம், வேலை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்தனர். தற்போது அரசின் பஸ் இயக்கலாம் என்ற முடிவால் அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.   இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழக முதல்வர் கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அமுலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை, இன்று (21.06.2021) முதல் 28.06.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில், வகை 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்.  

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.  அதனடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இன்று (21.06.2021) காலை 6.00 மணி முதல், 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: