பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் : 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

சென்னை: பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட ஏதுவாக ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டில் மூன்று கோடியே பத்து லட்சம் மின் இணைப்புதாரர்கள் உள்ளனர். இவர்கள் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள்,  மின்னழுத்த ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம்,

உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள் / புகார்களைப்  பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  மேலும் அதற்கான பிரத்யேகமான 94987 94987 என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத்தினார். இப்புதிய மின் நுகர்வோர் சேவை மையம், 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், புகார்தாரரின் கைப்பேசி எண்ணிற்குப் புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அப்புகார்கள் சரி செய்யப்பட்டவுடன், அது குறித்த தகவலும்,  குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மின்வாரியம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளம்   (ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்) மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ‘சோசியல் மீடியா செல்’ அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,

எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  5 ஆண்டுகாலம் இந்த துறையை நிர்வகித்த அமைச்சர், மின்தடையை பற்றி நாங்கள் சொன்ன கருத்துக்கு, அவர் ஒரு மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார். 9 மாதகாலமாக எந்த விதமான பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்பது தான் எங்களது குற்றச்சாட்டு. அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். கட்டணத்தை செலுத்தும் மின்நுகர்வோருக்கு 3 வாய்ப்புகளை முதல்வர் உருவாக்கி தந்திருக்கிறார். இதை பயன்படுத்தி, 10 லட்சம் பேர் பயனடைந்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்

தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்த முதல்வர்

‘மின்னகம்’ மையத்திற்கு பொதுமக்கள் புகார் அளிக்க தொடர்பு கொண்டால், என்ன மாதிரியாக அங்குள்ள ஊழியர்கள் பதில் அளிக்கிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்தார். அப்போது சங்கரன்கோவில் பகுதியில் இருந்து பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தனக்கு புதிய மின்இணைப்பு பெறுவதில் உள்ள பாதிப்பை எடுத்துக்கூறினார். அப்பெண்ணின் புகாரை எடுத்துக்கொண்ட மின்னகம் ஊழியர், அவர் புகாருக்கான எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவித்தார். பிறகு நன்றி கூறி இணைப்பை துண்டித்தார். இதனை முதல்வர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு மின்துறை அமைச்சர் மற்றும் ஊழியர்களுக்கு சம்மந்தப்பட்ட மையத்திற்கு வரும் புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

நவீன தொழில்நுட்பம்

‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தில் CC-MAC மென்பொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடனடியாக வாட்ஸ்அப் மூலம் புகார் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றடையும். இதன்மூலம் காலதாமதம் இருக்காது. எனவே பொதுமக்களது பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

Related Stories: