சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: வெப்ப சலனத்தின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 3 சென்டி மீட்டரும், கோவை மாவட்டம் சின்கோனா, அவலாஞ்சி, சின்னக்கல்லார், சோலையார், தேவலா, மேல் பவானியில் தலா 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இன்று கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் 23ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: