2021-22ம் புதிய கல்வியாண்டிற்கான கல்வித் தொலைக்காட்சி, பாடநூல் வழங்கும் திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: 2021-22ம் புதிய கல்வி ஆண்டிற்கான கல்வித்தொலைக்காட்சி மற்றும் மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில், 1 முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தனித்தனி அட்டவணை போடப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பாடங்களை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலவச பாடநூல் விநியோகம் நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கியது.

இந்தநிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை வழங்கியும், கொரோனா காரணமாக பள்ளி செல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்த படியே கல்வி பயில ஏதுவாக 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடம் எடுக்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார்.அப்போது,  மாணவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு பேனா மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.  இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த திட்டம் சுமார் ரூ.292 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 69 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். எனவே, மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை கல்வித்தொலைக்காட்சி வாயிலாக தவறாது கற்றுக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்து மாணவர்களுக்கான இரண்டு கல்வித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: