ரூ.5,000 ஆக இருந்தாலும்’ பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் : சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு!

சென்னை:  பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி, அதை தனது யூடியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்த மதன், யூ டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர், சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைமில் 2 புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மத்தியக் குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் புளியந்தோப்பு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட புகார்களும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு யூ டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து யூடியூப் சேனலுக்கு அட்மினாக செயல்பட்ட கிருத்திகாவை போலீசார் கைது செய்து 8 மாத குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று பப்ஜி மதன் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குண்டலப்பட்டியில் உள்ள கனிஷ் என்ற தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதனை மத்திய குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன், டிரோன் கேமரா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும், சென்னையில் இருந்த அவரின் 2 சொகுசு கார்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மதனின் வங்கிக் கணக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அவரது மனைவி வங்கிக் கணக்கில் சுமார் 4 கோடி பணம் இருப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது; புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் DCPCCB1@GMAIL.COM என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புகாரை அளிப்பவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.  மேலும் போலீசார் கூறியதாவது, மதன் தனது வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளோம். மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.4 கோடி இருப்பு உள்ளது. தலா ரூ.45 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் மதனுக்கு சொந்தமாக உள்ளது. மதனின் வருமான விவரங்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்படும்,என கூறியுள்ளனர்.

Related Stories:

>