ஜூலை முதல் வாரத்தில் ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டம்?

சென்னை: ஜூலை முதல் வாரத்தில் தனது ஆதரவாளர்களை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.  பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்தார். பின்னர், ஒரு சில வாரங்களிலேயே அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அரசியலில் இருந்து ஒதுங்கியதால் டிடிவி.தினகரனை ஆதரித்தும் அவர் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை. பின்னர், தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர்களை சந்தித்தார்.   

இந்நிலையில், கடந்த மாதம் தனது ஆதரவாளரிடம் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியானது. அதில், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும், அதிமுகவில் நடப்பவை எல்லாம் தனக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கட்சியை மீட்டெடுப்பேன் என்றும் பேசினார்.

சசிகலா தொடர்ந்து தனது ஆதரவாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். சசிகலாவின் இந்த திடீர் ஆடியோ அரசியல் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆடியோ அரசியலை நடத்தி வரும் சசிகலா, வரும் ஜூலை முதல் வாரத்தில் தனது ஆதரவாளர்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்டம் தோறும் உள்ள ஆதரவாளர்களை தனது இல்லத்தில் வைத்து அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். கொரோனா காலம் என்பதால் மாவட்டத்திற்கு 4 பேர் என தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதேபோல், அமமுகவில் இருந்து வெளியேறி தற்போது அதிமுகவில் இருக்கும் நபர்களுக்கும் ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>