பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடன சாமியார் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்: செங்கல்பட்டு சிறையில் அடைப்பு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில் ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு ஆசிர்வாதம் அளிப்பதாக கூறி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. இது சம்பந்தமாக, முன்னாள்  மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், மாமல்லபுரம் மகளிர்  போலீசார் சிவசங்கர் பாபா மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்த 2 ஆசிரியைகள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து டெல்லி ஓட்டலில் பதுக்கியிருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நள்ளிரவு 12 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி குணவர்மன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கட்டிப்பிடித்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் மாணவிகள் மட்டுமல்லாது தன்னை சந்திக்க வரும் பெண்கள் எல்லோரையும் கட்டிப்பிடித்துதான் ஆசீர்வாதம் செய்வேன்.

ஆனால் எனது தனி அறைக்கு அழைத்துச் சென்று கட்டிப்பிடித்ததால், முத்தம் கொடுத்ததால் தவறு என்கிறீர்கள் என்று தான் செய்ததை நியாயம் என்பதுபோல கூறினார். அப்போது, பொது இடத்தில் கட்டிப்பிடித்தால் தவறு இல்லை. தனியாக வரும் சிறுமிகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தவறுதானே என்று போலீசார் கேட்டபோது அவரால் பதில் கூற முடியவில்லை. போலீஸ் விசாரணையில் ஏதோ பித்து பிடித்ததுபோல பல முறை நடித்துள்ளார். பின்னர் உடல்நிலை சோர்வாக இருக்கிறது. எனக்கு 3 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது என்று அறுவை சிகிச்சை செய்ததை காண்பித்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

இதற்கிடையில், அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 6 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளிக்குள் சென்றனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் மூன்று வாகனங்கள் வரிசையாக உள்ளே வந்தன. அவற்றில் சிவசங்கர் பாபா கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் பள்ளி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர் முன்னிலையில் அவரது சொகுசு அறை சோதனையிடப்பட்டது. பின்னர், 15 நிமிடங்களில் வெளியே வந்த போலீசார் சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். ஜீப்பில் அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவை அழைத்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. ஜெயமோகன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் மீரான் ஆகியோர் சிவசங்கர் பாபாவுக்கு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதாகவும், அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி அம்பிகா, அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது. சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு சிறையில் வருகிற ஜூலை 1ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். சிறையில் இருக்கும்போது மருத்துவ கண்காணிப்பு தேவைப்பட்டால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் ., தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு அடைக்கப்பட்டார்.

* மகளிர் அமைப்பு முற்றுகை

நடன சாமியார் சிவசங்கர் பாபா நேற்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று வெளியான தகவலின் காரணமாக காலை 10 மணி முதல் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. ஆஷிஷ் பச்சாரோ தலைமையில் நீதிமன்றம் அருகே 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் மாலை 4.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் சிவசங்கர் பாபா வேனில் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றம் அருகே வரும்போது வெளியில் நின்றிருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் சிவசங்கர் பாபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி, அவர்  வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சங்கத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

* நடன ஆசிரியை சிக்குகிறார்

சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 நாள் போலீஸ் காவல் கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, அவரின் ரகசிய வீடியோக்கள், லேப்டாப் தகவல்கள் போன்றவை தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும், மாணவிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க உள்ளனர். மேலும், ராமராஜ்யம் ஆசிரமம், பாபாவின் ரகசிய அறை ஆகியவற்றை சீல் வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சிவசங்கர் பாபாவின் முன்பு மாணவிகளை நடனம் ஆட வைத்த நடன ஆசிரியை மற்றும் யோகா செய்ய வைத்த யோகா ஆசிரியை ஆகிய இருவரையும் பிடித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: