ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமர் சந்திப்பிற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 25 நிமிட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. முதல்-அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.

மேலும், அவர் குறிப்பிட்டதாவது:

* 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

* ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.

* செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

* உலகின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்

* திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

* மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

* சென்னை ஐகோர்ட்டின்  வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்

* நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

* புதிய மின்சார சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

* இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என கூறினார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: