நடிகையுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி மோசடி: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக திருமணம் செய்வதாக கூறி குடும்பம் நடத்தியதாகவும், அதனால் 3 முறை கர்ப்பமானதாகவும், திருமணத்துக்கு மறுத்ததுடன்,  கொைல மிரட்டல் விடுப்பதாக கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து தலைமறையான மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து  தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அப்துல் குத்தூஸ் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:  இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விசாரணை அதிகாரிகள் மருத்துவமனை ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சேகரித்துள்ளனர். கடந்த மே 2017 முதல் ஏப்ரல் 2021வரை மனுதாரரும் புகார் கொடுத்த சாந்தினியும் குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதை மணிகண்டன் வீட்டின் காவலாளி மணிகண்ட குமரன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். புகார் தாரருக்கு கருக்கலைப்பு செய்யதற்கான மருத்துவ ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்ததற்கு முகாந்திரம் உள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. புகார்தாரருக்கு 3 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சம்மந்தப்பட்ட மருத்துவமனையிலிருந்து போலீசார் சேகரித்துள்ளனர். கருக்கலைப்பு செய்த மருத்துவரையும் சாட்சியாக சேர்த்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் வழக்கின் உண்மை தெரியவரும். இந்த நிலையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க நேரிடும்.  அதுமட்டுமல்லாமல் விசாரணையிலிருந்து தப்பிக்க வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

மனுதாரருக்கு உதவி செய்த மருத்துவர், மனுதாரருக்கு அரசுத் தரப்பில் தரப்பட்ட காரின் டிரைவர், தனி உதவியாளர்கள், சமையல்கார பெண்கள் ஆகியோர் சம்பவம் குறித்து சாட்சியம் அளித்துள்ளனர். சாந்தியின் நிர்வாண படத்தை அவரது வாட்ஸ்அப்பில் மனுதாரர் தனது மொபைல்போனிலிருந்து அனுப்பியுள்ளார். இந்த ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சாந்தினியை மனுதாரர் மிரட்டியதற்கான ஆதாரங்களும் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை செய்திருக்கும் நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். பெண் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் தற்போதைய விசாரணை நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணையும் தாமதமாகிவிடும்.

விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் பொதுமக்களிடம் வேறுவிதமான கண்ணோட்டம் ஏற்பட்டுவிடும். மனுதாரர் இதுவரை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

Related Stories:

>