கட்டுமான பொருட்கள் 20% அதிகரிப்பு விலை உயர்வை நெறிபடுத்த தனி அமைப்பு: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சிமென்ட், எம்.சான்ட், கம்பி, ஜல்லி, செங்கல், மரக்கட்டை உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை 20%  உயர்வால் கட்டுமானத்துறையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுதவிர பெயின்ட், எலக்ட்ரானிக் ஹார்ட்வேர் பொருட்கள் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வின் காரணமாக கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து, வாடிக்கையாளருக்கு ஒப்புக்கொண்ட விலையில் வீடுகளைக் கட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த கட்டிடப்பணிகள் முடங்கிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை சாமானியர்களின் தலை மீது உற்பத்தி நிறுவனங்கள் சுமத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை நெறிபடுத்த தனியொரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: