2ம் தவணையாக கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது: பொதுமக்கள் மகிழ்ச்சி; இந்த மாதம் இறுதி வரை கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர். இந்த மாதம் இறுதி வரை வழங்கப்படும். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் பிறந்த நாளில் ரூ.4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக ரூ.2000 கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக 2வது தவணையாக தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொதுமக்களுக்கு 15ம் தேதி (நேற்று) முதல் ரேஷன் கடைகளில் இந்த தொகை கிடைக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று காலை 9 மணி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கும் பணி தொடங்கியது.டோக்கனை காட்டி பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பையை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர்.டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கிச் செல்லலாம்.

* ஏழைகளின் சிரிப்பு; திமுக அரசின் சிறப்பு: ஸ்டாலின் பெருமிதம்

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த ஏழை தாய்மார்களின் சிரிப்பே, நமது (திமுக) அரசின் சிறப்பு” என்று கூறியுள்ளார். அந்து டிவிட்டர் பதிவில் 4 ஏழை பெண்கள் ரேஷன் கடைகளில் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பை புன்னகையோடு வாங்கிச் சென்ற படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Related Stories: