அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து தப்பிய 3 கொரோனா நோயாளிகள் பிடிபட்டனர்: 8 பேருக்கு தனிப்படை வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து தப்பிய 3 கொரோனா நோயாளிகளை போலீசார் பிடித்தனர். தலைமறைவான மேலும் 8 பேரை தனிப்படை அமைத்து தேடுகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 34 ஊழியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி இங்கு வேலை செய்யும் சுஸ்மித் குமாருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தது. இதனையடுத்து, சக ஊழியர்கள் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ரோட்டரி மருத்துவமனையில் சேர்த்து, தொற்று பரிசோதனை செய்தனர். அப்போது, அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து, அம்பத்தூர் மண்டல சுகாதார துறை அதிகாரிகள் கம்பெனியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கம்பெனி நிர்வாகம் கொரோனா தொற்று விதிமுறையை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கம்பெனிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அங்கு தங்கி வேலை செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் கடந்த 13ம் தேதி ஊழியர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக சென்றுள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் 11 பேர் அங்கிருந்து வெளியேறினர்.

நேற்று முன்தினம் அம்பத்தூர் மண்டல சுகாதார அதிகாரிகள் கம்பெனிக்கு சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அப்போது அங்கு தினேஷ் (40) என்ற ஒரு தொற்று நோயாளி மட்டும் இருந்தார். மற்ற 11 பேர் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் தினேஷை மீட்டு அம்பத்தூர், கலைவாணர் நகரிலுள்ள தொற்று சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மாநகராட்சி தொழில் உரிமம் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 11 கொரோனா நோயாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், தப்பி ஓடிய கண்ணையா (23), சுதா (28), நரேன் (20) ஆகிய 3 ஊழியர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களை மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு, அதிகாரிகள் அவர்களை அம்பத்தூரில் உள்ள தொற்றுநோய் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும், தப்பி ஓடிய 8 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories: